ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, “தினமும் உன் கணக்கில் ரூ.86400/- டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றைய தினமே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம். அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல் மிஞ்சிய தொகையை நானே திரும்பவும் எடுத்துக் கொள்வேன். பயன்படுத்த முடிந்தது உனக்கு, மிஞ்சியது எனக்கு” என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
தினமும் அதில் ஒரு ரூபாயையாவது நீங்கள் மிஞ்ச விடுவீர்களா? முழுப்பணத்தையும் எப்படிச் செலவழிப்பது என்று திட்டமிட்டுச் செலவு செய்ய மாட்டீர்களா?
உண்மையிலேயே அப்படி ஒரு தேவதை அப்படி ஒரு வரத்தை உங்களுக்கு அளித்துள்ளது. அது தான் கால தேவதை. அது பணத்தை விட விலை மதிப்புள்ள 86400 வினாடிகளை உங்களுக்கு ஒரு நாளில் செலவழிக்கத் தருகிறது. அதில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்?
ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டால் கால விரயத்தை முழுவதும் தடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமக்கென்று செய்யத் திட்டமிட்ட வேலை இருந்தால் வீண்பேச்சு, வேடிக்கை பார்த்தல், அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம்.
இவை யாவும் இலக்கில்லாத வாழ்க்கையின் இயற்கையான குணாதிசயங்கள். திட்டமிட்டுச் செயல்படும் போது தெளிவாக இருக்கிறோம். அனாவசியங்களைத் தவிர்க்கிறோம். அதன் மூலம் காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கிறோம்.
ஒவ்வொரு நாள் இரவும் உங்களது அன்றைய செயல்களைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். காலதேவதையின் ‘டெபாசிட்’ எப்படியெல்லாம் செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். எப்படிச் செயல்பட்டிருந்தால் காலம் இன்னும் சிறப்பாகப் பயன்பட்டிருக்கும் என்று சிந்தியுங்கள். மறுநாள் அது போலவே இன்னும் சிறப்பாகவே காலத்தைப் பயன்படுத்திச் செயல்படுவேன் என்று மனதில் உறுதி பூணுங்கள்.
எல்லாவற்றைற்கும் மேலாக ஒரு செயலைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனத்தையும் அதில் வையுங்கள். இதனால் அச்செயலை விரைவாகவும் சிறப்பாகவும் செய்யும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்.
காலதேவதை கருணை உள்லது. ஒரு நாள் அந்த ‘டெபாசிட்’டை நீங்கள் வீணாக்கினீர்கள் என்பதற்காக மறுநாள் உங்களுக்கு அதைத் தராமல் இருப்பதில்லை. பெருந்தன்மையுடன் உங்களுக்குத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.